அறுவை சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தீவிர சிகிச்சை
சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 13 ஆம் தேதி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் முடிவில் நள்ளிரவில் செந்தில் பாலாஜியை அவரது இல்லத்தில் இருந்து விசாரணைக்கு அழைத்து செல்ல அமலாக்கத்துறை அதிகாரிகள் முயற்சி போது, திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜியை பரிசோதித்த மருத்துவர்கள், அவருடைய இதய ரத்த நாளங்களில் அடைப்புகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்க வேண்டி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், அதற்கு அனுமதியளித்தையடுத்து, ஆழ்வார்பேட்டையில் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார்.
சீராக உள்ளது
செந்தில் பாலாஜியின் இருதயத்தில் அடைப்புகள் இருந்ததால், நேற்று காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு, சுமார் 3 மணி நேரத்துக்கு செந்தில் பாலாஜி மயக்க நிலையில் இருந்தார். அதன்பிறகு அவருக்கு மயக்கம் தெளிந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று பைபாஸ் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறினார்.