பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கச்சிதமான தேர்வு
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படமாக உருவாக்க பல முன்னணி இயக்குநர்கள் முயற்சித்தும் முடியாத நிலையில், இதனை சாத்தியமாக்கி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். புத்தகத்தில் மட்டுமே படித்து வந்த கதாபாத்திரங்கள் நேரில் அமைந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்த நிலையில், அத்தனை கதாபாத்திரத்திற்கும் உயிர் கொடுக்கும் விதமாக ஆதித்த கரிகாலன், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவன், நந்தினி, குந்தவை, சுந்தரச் சோழர், பூங்குழலி, வானதி, அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் நம்பி, மதுராந்தகன், சேந்தன் அமுதன், வீரபாண்டியன், ரவி தாசன், ஊமை ராணி என அணைத்து கதாபாத்திரங்களின் நடிகர்களையும் கச்சிதமாக தேர்ந்தெடுத்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
விக்ரம் – ஐஸ்வர்யா ராய் காம்போ
பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் அள்ளியது. அதனைதொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இரண்டாம் பாகத்தில் கடலில் விழுந்த அருண்மொழிவர்மன், வந்திய தேவனும் இறந்து போனதாக தஞ்சைக்கு தகவல் கிடைத்த நிலையில், அனைவரும் கலங்கி நிற்கின்றனர். ஆதித்ய கரிகாலனுக்கு இந்த செய்தி தெரிந்ததும் தன் தம்பியின் மரணத்திற்கு நந்தினி தான் காரணம் என அவரை கொல்ல தஞ்சை நோக்கி வருகிறார். ஆனால் கடலில் விழுந்த இருவரையுமே மந்தாகினி எனும் ஊமை ராணி (ஐஸ்வர்யா ராய்) காப்பாற்றுகிறார். மற்றொரு பக்கம் முன்னாள் காதலனான ஆதித்ய கரிகாலனை கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மும்மரமாக செய்து வைக்கிறார் நந்தினி (ஐஸ்வர்யா ராய்).
ஐஸ்வர்யா ராய் அசத்தல்
விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா என அனைத்து முக்கிய கதாபாத்திரங்களும் தனது பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர். பின்னணி இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், தோட்டா தரணியின் பிரம்மாண்ட செட்டுகள், இளங்கோ கிருஷ்ணனின் பாடல் வரிகள் என அனைத்தும் படத்திற்கு பிரம்மாண்டத்தை சேர்த்துள்ளது. சீயான் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராயின் டபுள் ரோல் நடிப்பு இரண்டாம் பாகத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
செம வசூல்
ரிலீஸுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்த்த நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் மூன்று நாட்களில் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் ரூ.61.53 கோடியும், இரண்டாவது நாளில் ரூ.45.21 கோடியும், மூன்றாவது நாளில் ரூ.42.80 கோடியும் வசூலித்துள்ளதாக திரை வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வட அமெரிக்காவில் மூன்று மில்லியன் டாலர்கள் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.