“காதல் கோட்டை” திரைப்படம் தனது வாழ்க்கைக்கு முக்கியமான படம் என நடிகை தேவயானி கூறியுள்ளார்.
விலக முடிவு
90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. சில பெங்காலி படங்களில் நடித்ததற்கு பிறகு மலையாளத்தில் அறிமுகமான நடிகை தேவயானி. தொட்டாசினிங்கி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ஆரம்ப கட்டத்தில் அவர் நடித்த படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலமாகவில்லை என்பதால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்ததாக நடிகை தேவயானி கூறியுள்ளார். மேலும் காதல் கோட்டை படத்தில் நடித்த சமயத்தில் இந்த படத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மாபெரும் வெற்றி
இது குறித்து நடிகை தேவயானி கூறுகையில், “காதல் கோட்டை படம் கமிட்டான போது அந்த ஒரு படம் மட்டும் தான் கைவசம் இருந்தது. அந்த படம் ஓட வில்லை என்றால் நான் சினிமாவை விட்டு விலகி இருப்பேன். கண்டிப்பாக காதல் கோட்டை படம் வெற்றி பெறும் என நினைத்து நான் கடுமையாக உழைத்தேன். அப்படம் நாங்கள் அனைவரும் நினைத்ததைவிட மாபெரும் வெற்றி அடைந்தது. அந்த படத்தால் தான் அடுத்தடுத்து பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று கூறியுள்ளார். காதல் கோட்டை படத்தில் அஜித் குமாருக்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் பல படங்களில் நடித்து, டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.