90ஸ் கிட்ஸின் ஃபேவரிட் நடிகையான சரண்யா பொன்வண்ணன் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
முதல் படத்திலேயே ஹிட்
1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக ‘நாயகன்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சரண்யா. இவர் நடிப்பில் வெளியான முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதும், பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது உள்ளிட்ட படங்கள் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடிக்க துவங்கிய சரண்யா, சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வரத் தொடங்கினார்.
ஹீரோக்களுக்கு அம்மா
1995 ஆம் ஆண்டு நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட பிறகு, சில வருடங்கள் நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்த சரண்யா, அலை படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. சிம்புவுக்கு அம்மாவாக நடித்திருந்த சரண்யா, அதன்பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், ஹீரோக்களுக்கு அம்மாவாகவும் நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்துக் கொண்டார். அருள், ராம், சிவகாசி, கிரீடம், வேல், குருவி என பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். இப்போது இருக்கும் டாப் நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து இன்றும் தமிழ் சினிமாவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.
பல படங்களில் பிஸி
2014 ஆம் ஆண்டு வெளியான வேலையில்லா பட்டதாரி, ரெமோ, கொடி, கோலமாவு கோகிலா, விருமன் உள்ளிட்ட படங்களில் சரன்யாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை. இவரது நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் உள்ளது. அதன்பிறகு இடி முழக்கம், கேங்ஸ்டர் கிராணி, எம். ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தற்போது தமிழில் பல படங்களை கைவசம் வைத்துள்ள சரண்யா, தெலுங்கில் குஷி திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பதித்துள்ள நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த தினம் இன்று. 53வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.