திருமண மண்டபங்களில் மதுபானங்களை பயன்படுத்த அனுமதி இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
அனுமதி
திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பரிமாறவும், மதுபானம் பயன்படுத்தவும் அனுமதி வழங்கி தமிழக அரசு இன்று காலை அரசாணை வெளியிட்டது. மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியுடன், மதுவிலக்குத்துறை சிறப்பு அனுமதி வழங்கலாம் என புதிய சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் உரிய அனுமதி பெற்று இனி திருமண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானம் பயன்படுத்தலாம். கட்டணம் செலுத்தி மதுபானம் பயன்படுத்த அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசிதழ் வெளியிடப்பட்டது.
விளக்கம்
இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது; திருமண மண்டபங்களில் மதுபானங்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை; “சர்வதேச நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். தமிழ்நாட்டில் சர்வதேச நிகழ்ச்சிகள், சர்வதேச போட்டிகள் நடைபெற வேண்டும் என்றால் மது அருந்த அனுமதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சர்வதேச நிகழ்ச்சிகளில் மதுபானம் அனுமதி நடைமுறையில் உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் மாநாடுகள், ஐபிஎல் போட்டி போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே அனுமதி” என அவர் விளக்கம் அளித்தார்.