பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நடிகை சமீரா ரெட்டி அறிவுரை கூறியுள்ளார்.
வாரணம் ஆயிரம் ஹிட்
ஹிந்தி மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் சமீரா ரெட்டி. 2008 ஆம் ஆண்டு வெளியான “வாரணம் ஆயிரம்” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யா, சிம்ரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் சமீரா ரெட்டி. அதன்பிறகு அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஆனால் வாரணம் ஆயிரம் அளவிற்கு அந்த எந்த படங்களும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. கடைசியாக 2013 ஆம் ஆண்டு கன்னட படத்தில் நடித்திருந்த சமீரா ரெட்டி, சினிமாவை விட்டு விலகி உள்ளார்.
நரைமுடியுடன் சமீரா
2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சமீரா ரெட்டிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தன் குழந்தைகளுடன் செய்யும் சேட்டைகளை அப்பட்டமாக வீடியோ எடுத்து பதிவிடுவார். நடிகைகள் பலரும் தனக்கு இருக்கும் நரைமுடியையும், தோல் சுருக்கத்தையும் வெளியே தெரியக்கூடாது என்பதற்காக மேக்கப் போட்ட பிறகு புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருவார்கள். ஆனால் நடிகை சமீரா ரெட்டி அவ்வாறு இல்லாமல், உண்மையான தோற்றத்தை வெளியிடுவார். சமீபத்தில் நடிகை சமீரா ரெட்டி பேட்டி ஒன்றில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறி இருப்பதாவது, “நான் நடிகையாகி, தாயாகி விட்டேன். உடலின் நிறத்தை வைத்தோ, தலைமுடி நரைத்தது குறித்து ஒருவரை மதிப்பீடு செய்வதோ அநாகரீகம். எப்போதும் எனது வெள்ளை முடியையும் வயிற்றில் உள்ள கோடுகளையும் நான் மறைக்க முயற்சிப்பதே கிடையாது. பெண்கள் உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஆரோக்கியம் முக்கியம்
சமூக வலைதளத்தில் வெளியாகும் டயட் திட்டத்தை எல்லாம் கடைபிடிக்கக் கூடாது. ஒரேநேரத்தில் மொத்தமாக சாப்பிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுவதை பழக்கமாக்கி கொண்டேன். எனது அப்பா தான் ட்ரை ஃப்ரூட்ஸ் சாப்பிட பழக்கப்படுத்தினார். என் குழந்தைகளுக்கும் அதையே நான் பழக்கப்படுத்தினேன். எப்பொழுதும் ஆரோக்கியமான வாழ்க்கையை குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டும். நொறுக்கு தீனியை அதிகமாக விரும்பி சாப்பிட்டால், அவர்களும் குப்பையோடு தான் வயிற்றை நிரப்புவார்கள். பெண்களின் ஆரோக்கியத்தில் தான் குடும்ப ஆரோக்கியம் சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம் என்று அறிவுரை கூறியுள்ளார்.