பத்து தல திரைப்படத்தை காண வந்த நரிக்குறவர் இன மக்களை உள்ளே அனுமதிக்காத ரோகிணி திரையரங்கத்திற்கு மக்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
சர்ச்சையில் சிக்கிய சிம்பு படம்
மாநாடு, வெந்து தணிந்தது காடு என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வந்துள்ள சிம்பு, தற்போது பத்து தல படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இப்படத்தைப் பார்த்த சிம்பு ரசிகர்கள் அதனை கொண்டாடிப் புகழ்ந்து வருகின்றனர். பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் . ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தில், சாயிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
தடுத்து நிறுத்தம்
சென்னையில் இருக்கும் பிரபலமான ரோகினி திரையரங்கில் காலை 8 மணி காட்சியை பார்ப்பதற்கு, நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும் ஒரு சிறுவனும் வந்திருந்தனர். படத்திற்கான டிக்கெட்டை வாங்கிய பிறகு திரையரங்குக்குள் செல்ல முயன்றனர். அப்போது தியேட்டர் நுழைவு வாயலில் நின்று கொண்டிருந்த ஊழியர் ஒருவர், அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கையில் டிக்கெட் இருக்கிறது பிறகு ஏன் உள்ளே விடவில்லை என ஊழியரிடம் கேள்வி எழுப்பியும், அவர்களை உள்ளேவிட ஊழியர் மறுத்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவியதை அடுத்து, ரோகிணி தியேட்டருக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றது.
விளக்கம் கொடுத்த நிர்வாகம்
இந்த பிரச்சனை நிர்வாகத்தின் கவனத்திற்கு சென்றதும் நிர்வாகம் தன் விளக்கத்தை கொடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள கூறியிருப்பதாவது; “பத்து தல திரைப்படம் திரையிடப்படுவதற்கு முன்பு இன்று காலை எங்கள் வளாகத்தில் நடந்த சூழ்நிலையை நாங்கள் கவனித்தோம். ‘பத்து தல’ படத்தைப் பார்க்க செல்லுபடியாகும் டிக்கெட்டுகளுடன் சில நபர்கள் தங்கள் குழந்தைகளுடன் திரையரங்கிற்குள் நுழைய முயன்றனர். இப்படத்தை அதிகாரிகள் யு/ஏ தணிக்கை செய்தது எங்களுக்கும் தெரியும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சட்டப்படி U/A சான்றிதழ் பெற்ற எந்தத் திரைப்படத்தையும் பார்க்க அனுமதிக்க முடியாது. 2, 6, 8 மற்றும் 10 வயது குழந்தைகளுடன் வந்திருந்த குடும்பத்தினருக்கு எங்கள் டிக்கெட் சோதனை ஊழியர்கள் இந்த அடிப்படையில் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் கூடி இருந்த பார்வையாளர்கள் வெறித்தனமாக மாறி, சூழ்நிலையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளாமல் வித்தியாசமான கண்ணோட்டத்துடன் எடுத்துக்கொண்டதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கவும், விஷயத்தை உணர்ச்சியற்றவர்களாகவும் கருதியதால், அதே குடும்பத்தினர் சரியான நேரத்தில் திரைப்படத்தைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.