சென்னையில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறும் மார்ச் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இசை நிகழ்ச்சி
இதுதொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வெளிப்புற பங்குதாரர் மார்க் மெட்ரோ நிறுவனத்தின் சார்பில் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணி முதல் 11:30 மணி வரை நடைபெறுகிறது.
சேவை நீட்டிப்பு
இந்நிகழ்ச்சி டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதால், நிகழ்ச்சியை கண்டுகளிக்க வரும் மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இரவு 11:00 மணி வரை இயக்கப்பட்டு வரும் மெட்ரோ இரயில் சேவைகள், அன்று மட்டும் நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள், மார்ச் 19 அன்று மெட்ரோ இரயில் நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், பல்வேறு இடங்களில் இருந்து நிகழ்ச்சியை கண்டுகளிக்க மெட்ரோ இரயில்களில் வரும் மெட்ரோ பயணிகள், க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி 20% கட்டணத் தள்ளுபடியை பெற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளபடுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது