தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டுவதாக எழுந்த சர்ச்சையை அடுத்து பீகார் அதிகாரிகள் குழு தமிழக அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறது. 
வடமாநில தொழிலாளர்கள்
தமிழகத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அதிகளவில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்கள், தற்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அதிக நேர வேலை, குறைந்த அளவு ஊதியம் என்பதால் தமிழகத்தில் தொழில்புரிவபர்கள் அதிகளவில் வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தியுள்ளனர். 
வதந்தி
இந்த நிலையில், வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் வெளியானது. இது பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், அந்த 2 வீடியோக்களும் போலியானது என தமிழக அரசு தெரிவித்தது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று வீடியோக்கள் போலியாக தயாரிக்கப்பட்டு வதந்தி பரப்பப்பட்டுள்ளாதாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். இணையதளத்தில் பரவும் 2 வீடியோக்களும் மிக பழையவை என்றும் ஒரு வீடியோ பீகார் மற்றும் ஜார்க்கண்ட் தொழிலாளர்களுக்கு இடையேயான மோதல் தொடர்பானது, மற்றொன்று உள்ளூர் மக்களுக்குள் நிகழ்ந்த மோதல் தொடர்பானது என்றும் அவர் விளக்கமளித்தார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
எதிர்கட்சிகள் அமளி
இந்த விவகாரம் நேற்று பீகார் சட்டப்பேரவையில் எதிரொலித்தது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் பீகார் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாநில பாஜகவினர் சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதற்கு பதில் அளித்து பேசிய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தமிழகத்தில் உள்ளூர் மக்களால் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோக்களில் உண்மையில்லை என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அளித்த விளக்கத்தை சுட்டிக்காட்டி பேசினார். இதனிடையே தமிழகத்துக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை முதலமைச்சர் நிதிஷ்குமாரும் ஏற்றுக்கொண்டு உள்ளார்.
குழு வருகை
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசுடன் பீகார் ஐஏஎஸ் அதிகாரிகள் அலோக்குமார், பாலமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இன்று மாலை சென்னை வரும் பீகார் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு, தமிழ்நாடு அரசுடன் ஆலோசனை நடத்த உள்ளது.













































