நடிகர் மயில்சாமியின் கடைசி ஆசையை கண்டிப்பாக நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நெருங்கிய நண்பர்

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் மயில்சாமி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். மயில்சாமியின் மறைவை அறிந்த திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வந்தனர். சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் மறைந்த மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மயில்சாமி எனது நெடுங்கால நண்பர், அவருக்கு 23, 24 வயதில் மிமிக்ரி கலைஞராக இருக்கும்போதே எனக்கு அவரை தெரியும். மிமிக்ரி கலைஞராக இருந்து நகைச்சுவை நடிகராக மாறினார். மிகத் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர் அவர். அதைவிட தீவிரமான சிவ பக்தர் நாங்கள் அடிக்கடி சந்திக்கும்போது நான் சினிமா உலகம் பற்றி பேசினாலும், அவர் அதைப் பற்றி பேசாமல் எம்ஜிஆர் மற்றும் சிவன் பற்றி மட்டும் தான் பேசுவார். நாங்கள் மிகப்பெரிய நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதிக படங்கள் நடிக்கவில்லை.

ஆசையை நிறைவேற்றுவேன்

ஒவ்வொரு முறையும் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலைக்கு சென்று அங்கு இருக்கும் கூட்டத்தை பார்த்து பரவசமடைந்து, அங்கிருந்து எனக்கு போன் செய்து பேசுவார். கடந்த முறை கார்த்திகை தீபத்தின் போது எனக்கு போன் செய்தார், நான் ஷூட்டிங்கில் இருந்ததால் என்னால் பேச முடியவில்லை. விவேக், மயில்சாமி இந்த இரண்டு நகைச்சுவை நடிகர்களின் இழப்பு சினிமா உலகம், அவரது நண்பர்களுக்கு, குடும்பத்தினருக்கு மட்டுமல்ல சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பு. இரண்டு பேரும் நல்ல சிந்தனைவாதிகள் சமூக அக்கறையுள்ள மனிதர்கள். அவர் இந்த சிவராத்திரி அன்று காலமானது ஏதோ தற்செயல் நிகழ்வு கிடையாது. இது எல்லாம் தெய்வத்தின் கணக்கு. அவருடைய தீவிர பக்தனை அவருக்கு உகந்த நாளில் கூப்பிட்டுக்கொண்டார். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. மயில்சாமியின் வாரிசுகளுக்கு சினிமா உலகத்தில் நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன், என்று ரஜினிகாந்த கூறினார். மயில்சாமி கடைசியாக சிவராத்திரி நிகழ்வில் கலந்துகொண்ட சிவன் கோயிலில் ரஜினிகாந்த் பாலாபிஷேகம் செய்யவேண்டும் என்று டிரம்ஸ் சிவமணியிடம் மயில்சாமி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, “ஆமங்க நானும் கேள்விப்பட்டேன். அதுபற்றி சிவமணியிடம் விசாரித்துவிட்டு கண்டிப்பாக மயில்சாமியின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்” என்று கூறினார்.
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here