தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
உயிருடன் இருக்கிறார்
தஞ்சை மாவட்டம் விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பிரபாகரன் நலமுடனும், உயிருடனும் இருப்பதாக கூறினார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
மக்கள் முன் வருவார்
பிரபாகரனுடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்த பழ.நெடுமாறன், அவருடைய அனுமதியின் பேரிலேயே செய்தியாளர்களை சந்திப்பதாகவும் கூறினார். பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளதாகவும், உரிய நேரத்தில் மக்கள் முன் அவர் வருவார் என்றும் நெடுமாறன் தெரிவித்தார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது எனத் தெரிவித்த அவர், தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இலங்கையில் ராஜபக்சேக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் பழ.நெடுமாறம் அப்போது கூறினார்.