ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் எம்பி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவும் ஒரு வீரமரணம்தான் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை யாத்திரை
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணம் 12 மாநிலங்களில் 3,500 கிமீ தூரத்தை 150 நாட்களில் கடந்து பிப்ரவரி முதல் வாரத்தில் ஜம்மு காஷ்மீரில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிறைவடைய இருக்கிறது.
மரணம்
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பஞ்சாபில் நடைபெற்று வருகிறது. லூதியானா பகுதியில் நடைபெற்ற யாத்திரையில் ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி பங்கேற்றார். யாத்திரை ஃபில்லூர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சந்தோக் சிங் செளத்ரி திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் பக்வாராவிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், சந்தோக் சிங் செளத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இரங்கல்
காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் செளத்ரி மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது; இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது மறைந்த ஜலந்தர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் சிங் செளத்ரி அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதுவும் ஒரு வீரமரணம்தான். நீங்கள் என்றென்றும் நினைவு கூறப்படுவீர்கள்’ என தெரிவித்துள்ளார்.