கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க சென்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் திருடு போனதால் அவர் கடும் இன்னல்களை சந்தித்துள்ளார்.
முன்னணி நடிகை
தென்னிந்திய திரைப்படத்துறையில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர், தமிழ் சினிமாவில் 2012-ம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தெலுங்கில் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இவரது நடிப்பில் வெளிவந்த ‘பீஸ்ட்’ திரைப்படம் பூஜா ஹெக்டேவை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இதுமட்டுமின்றி சல்மான் கான், பிரபாஸ் என முன்னணி நடிகர்களோடும் அவர் இணைந்து நடித்திருக்கிறார்.
கேன்ஸ் திரைப்பட விழா
75-வது கேன்ஸ் திரைப்பட விழா, அண்மையில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதையும், தங்களது படங்கள் திரையிடப்படுவதையும் மிகப்பெரிய கவுரவமாக சினிமா நட்சத்திரங்கள் கருதி வருகின்றனர். தற்போது தொடங்கியுள்ள கேன்ஸ் விழாவில் நடிகர்கள் கமலஹாசன், பார்த்திபன், மாதவன், நடிகை தமன்னா, இயக்குநர் பா. ரஞ்சித், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் திரையுலகின் ஊர்வசி ரெளட்டாலா, தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் நடிகை பூஜா ஹெக்டே முதன்முறையாக கலந்து கொண்டிருக்கிறார்.
பரிதவிப்பு
கேன்ஸ் திரைப்பட நிகழ்ச்சியில் அணிவதற்குத் தேவையான விலை உயர்ந்த ஆடைகள், நகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார் பூஜா. பிரான்ஸ் நகருக்கு சென்ற பிறகுதான் அவரது ஆடைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் இருந்த சூட்கேஸ் காணாமல் போனது தெரியவந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் தருணத்தில் இப்படி ஆனதே என பூஜா ஹெக்டே ஆதங்கப்பட்டார். அவரும், அவரது உதவியாளர்களும் சூட்கேஸை வலைவிரித்து தேடியும் கிடைக்கவில்லை. வேறு வழியில்லாமல் மாற்று ஏற்பாடு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பூஜா ஹெக்டே. இருப்பினும் அதிர்ஷ்டவசமாக அவர் கொண்டுவந்த விலை உயர்ந்த நகைகள் பத்திரமாக உள்ளதாம்.