பிரபல தமிழ் திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.
பிரபல நடிகை
இயக்குநர் கே.பாலசந்தரால் ‘அவள் அப்படித்தான்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், நடிகர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான கோபாலா கோபாலா, சின்னவர் உள்பட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாரின் ‘சேரன் பாண்டியன்’ படத்தில் நடிகர் சரத்குமாரின் தங்கையாக சித்ரா நடித்துள்ளார். இதன்பின்பு நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பிரபலமானதால் ‘நல்லெண்ணெய் சித்ரா’ என அழைக்கப்பட்டார்.
திடீர் மாரடைப்பு
திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர், சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சித்ராவுக்கு வெள்ளிக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் சித்ரா உயிரிழந்தார். சித்ராவின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சித்ராவின் மறைவிற்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.















































