மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருஉருவ சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சிலைக்கு கீழே அவரது உருவப்படமும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை அரசின் சார்பில் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதும், காமராஜரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் காமராஜரின் திருஉருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
கனிமொழி எம்.பி. மரியாதை
இதேபோல், காமராஜரின் சொந்த ஊரான விருதுநகரில் உள்ள அவரது நினைவு இல்லம், மணிமண்டபம் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, அரசு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.