கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் சரிவு
தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ததால் அதன் தேவை அதிகரித்து, விலையும் கணிசமாக உயர்ந்து வந்தது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்தன. இதற்கிடையே 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.34,912-க்கும், கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4,364-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.74-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை மீண்டும் ரூ.35,000-க்கு கீழ் வந்துள்ளதால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.