பழநி முருகன் கோவிலில் நாளை தேதி வரை இலவச தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு முடிவடைந்துவிட்டது.
உலகப்புகழ் பெற்ற கோவில்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி கோவில் உலகளவில் புகழ்பெற்றதாகும். இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்து, தண்டாயுதபாணியை தரிசித்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக சுவாமி தரிசனம், தங்கத்தேர் இழுத்தல், வின்ச் டிக்கெட் உள்ளிட்டவற்றுக்காக ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளும் வசதி, சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பலமணி நேரம் காத்திருக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களால் சுவாமி தரிசனம் செய்ய முடிந்தது.
இலவச தரிசனம் ஹவுஸ்புல்
இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் அனைத்து கோயில்களிலும் கடந்த மார்ச் 19ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. 160 நாட்களுக்கு பிறகு தமிழக அரசு அறிவித்த செப்டம்பர் மாத தளர்வுகளில் கோயில்களை திறக்க அனுமதி அளித்தது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட தடை விலக்கி கொள்ளப்பட்டது. ஆனால், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை பழநி கோவிலில் பக்தர்கள் கூட்டம் சராசரியாக இருந்தது. இந்நிலையில் நேற்று துவங்கி வரும் 6ம் தேதி வரை இலவச தரிசன முன்பதிவு முழுவதும் புக் செய்யப்பட்டு ஹவுஸ் புல்லாகிவிட்டது. தற்போது நாள் ஒன்றிற்கு சுமார் 1,500 பேர் முதல் 2000 பேர் வரை மட்டுமே ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடிகிறது. எனவே, கோயில் நிர்வாகம் நாள்தோறும் கூடுதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.