மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
பரபரப்பு போஸ்டர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் தளபதி விஜய்க்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் அரசியலில் ஈடுபட வேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் விருப்பமாகும். இதனை வெளிப்படுத்தும் விதமாக, நடிகர் விஜய்யை எம்ஜிஆரின் மறுஉருவமாக சித்தரித்து மதுரை, தேனி மாவட்ட ரசிகர்கள் அப்பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில் எம்.ஜி.ஆரின் மறு உருவமே! மாஸ்டர் வாத்தியாரே! அழைக்கிறது தமிழகம் தலைமையேற்க, 2021ல் உங்கள் வரவை காணும் தமிழகம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விமர்சித்த அமைச்சர்
நடிகர் விஜய்யின் போஸ்டர் தொடர்பாக சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், எம்.ஜி.ஆர். இடத்தை நடிகர் விஜயால் நிரப்ப முடியாது என்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா 2 பேர் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது என்றும் கூறினார். கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என பாஜக தலைவர் எல். முருகன் தங்களுக்கு கட்டளையிட முடியாது எனத் தெரிவித்த அவர், கூட்டணி தர்மத்தை தாங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக கூறினார். இடைத்தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும், சிறையில் இருந்து வெளியே வந்தாலும், சசிகலாவின் தலையீடு அதிமுகவில் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே தங்களின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.