பெங்களூரூ சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா இம்மாத இறுதியில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.
சிறையில் சசிகலா
சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீதிபதி குன்ஹா அளித்த சிறை தண்டனையை உறுதி செய்ததுடன், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா ரூ. 10 கோடியும் அபராதமாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்களின் தண்டனைக் காலம் வருகிற 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தண்டனைக் காலத்திற்கு முன்பே அவர்கள் விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின.
சொத்துக்கள் முடக்கம்
இந்த நிலையில், சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2017ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியதன் அடிப்படையில், சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு எதிரே உள்ள 8 கிரவுண்டு இடத்தை, சசிகலா பினாமி பெயரில் வாங்கி இருப்பதாக கூறி, வருமான வரித்துறை முடக்கியுள்ளது. அங்கு கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் வேளையில், ‘பினாமி தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த இடம் முடக்கப்பட்டு உள்ளது’ என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதுமட்டுமின்றி சசிகலாவின் பல கோடி மதிப்பிலான சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சிறையில் இருக்கும் சசிகலா மற்றும் சொத்துகளை பதிவு செய்த சார்பதிவாளர் உள்ளிட்டோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு சசிகலா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டியே விடுதலை?
இதுகுறித்து சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறுகையில்; வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் மிகவும் தவறாகும். இப்பிரச்சனையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம். சசிகலா இந்த மாத இறுதிக்குள் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தண்டனை குறைப்பு பெற்று விடுதலை நிலையை அடைந்துவிட்டார். அதற்கான சட்டப்பணிகளை நாங்கள் மேற்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.