வடிவேல் பட பாணியில் 5 கணவர்களை உதறிவிட்டு 6வது திருமணம் செய்துகொண்ட பெண் ஒருவர் பாதுகாப்பு கேட்டு காதலருடன் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலருடன் தஞ்சம்
அர்ஜூன் நடிப்பில் வெளியான ‘மருதமலை’ திரைப்படத்தில் நடிகர் வடிவேல் நடித்த ஒரு நகைச்சுவை காட்சி இடம்பெற்றிருக்கும். வடிவேலு போலீஸ் ஏட்டாக நடித்திருக்கும் அந்தக் காட்சியில், காவல் நிலையத்திற்கு வரும் ஒரு காதல் ஜோடி, தங்களுக்கு பாதுகாப்பு வழங்கி, திருமண செய்து வையுங்கள் என்பார்கள். சிறிது நேரத்தில் அந்த பெண்ணை உரிமை கொண்டாடி 5 கணவர்கள் வருவார்கள். அதைக்கேட்டு வடிவேல் அதிர்ச்சியில் உறைந்து போவார். பிரபலமான இந்த நகைச்சுவை காட்சியைப் போலவே தற்போது ஒரு உண்மை சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கம்பிஹள்ளி கிராமத் சேர்ந்தவர் சந்துரு (22). இந்த இளைஞர் பிரியா (38) என்ற பெண்ணுடன் அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று, தாங்கள் இருவரும் காதலிப்பதாகவும், தங்களது காதலுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு இருப்பதாகவும் கூறி பாதுகாப்பு அளிக்குமாறு கேட்டுள்ளார். மேலும் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினார்.
கணவன்கள் கதறல்
சிறிது நேரத்தில் காவல் நிலையத்திற்கு வந்த 5 பேர், சந்துரு அழைத்து வந்தது தங்களுடைய மனைவி என்று ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி கூறியுள்ளார்கள். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, சிக்மகளூருவை சேர்ந்த பசவராஜ், பெங்களூருவைச் சேர்ந்த கிரண், ரமேஷ், துக்காராம் மற்றும் ஒரு வாலிபர் ஆகியோரை, பிரியா காதலித்து திருமணம் செய்து, சிறிது காலம் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவாகி உள்ளார். அதில் 2 பேருடன் குழந்தையும் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல், தற்போது சந்துருவை தீவிரமாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்தான் தனக்கு வேண்டும் என்றும் அடம்பிடித்துள்ளார். இதனையடுத்து சந்துருவை அழைத்துப் பேசிய போலீசார், கள்ளக்காதலில் இதுவும் ஒரு வகை என்று புரியவைக்க முயற்சித்தனர். ஆனால் பிரியா தான் வேண்டுமென அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். ஆனால், பிரியா தான் தங்களது வாழ்க்கைத் துணையாக வேண்டும் என்று பசவராஜ் உள்ளிட்ட முன்னாள் கணவர்கள் 5 பேரும் அழுது புரண்டனர். போலீசார் எவ்வளவோ அறிவுரை வழங்கியும் அவர் கேட்காததால், முறைப்படி விவாகரத்து பெறாமல் சந்துருவை திருமணம் செய்து கொண்டதாக பிரியா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. வடிவேலு பட பாணியில் அரங்கேறிய இந்த வினோத சம்பவம், கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.