வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள்மாவட்டங்களான வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தருமபுரி, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 23, 24, 25 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பரவலாக மழை
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 5 செ.மீ. மழையும், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், ஆண்டிபட்டியில் தலா 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது, சாத்தையாறில் 3 செ.மீ. மழையும், திருச்சி மருங்காபுரியில் 2 செ.மீ. மழையும், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.