பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல முயன்ற செய்தியை கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
வேட்டையாடிய வழக்கு
அரியவகை மான்களை வேட்டையாடிய வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு சிறை தண்டனை விதித்தது ஜோத்பூர் நீதிமன்றம். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தது அனைவரும் அறிந்ததே. பிஷ்னோய் இன மக்கள் மான்களை தெய்வமாக வழிபட கூடியவர்கள். அவர்கள் அனைவரும் சல்மான் கான் மீது கொலை வெறியில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த இனத்தைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், நடிகர் சல்மான் கானை கொல்லுவோம் என்று மிரட்டல் விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்மீது பல கொலை, கொள்ளை வழக்குகளும் உண்டு. தற்போது ராஜஸ்தானின் பரத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், சிறையில் இருந்தபடியே சமூக விரோத செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என கூறப்படுகிறது.
கொலை செய்ய சதி
நடிகர் சல்மான் கான் ஊரடங்கு காரணமாக தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அங்கே இருக்கும் தோட்டங்களை சுத்தம் செய்வது, தனது செல்லப் பிராணியான குதிரையுடன் விளையாடுவது, அதற்கு உணவு கொடுப்பது என்று பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் நடந்த கொலை வழக்கு ஒன்றில் ராகுல் என்பவரை ஃபரிதாபாத் போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் இருக்கும் பிரபல தாதா லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும், நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சல்மான் கானை கொல்வதற்காக, மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டை கடந்த ஜனவரி மாதம் முதல் உளவு பார்த்த ராகுல், அவர் வீட்டுக்கு யார் யாரெல்லாம் வருகிறார்கள் என்பன உட்பட பல தகவல்களையும், அவர் வெளியே செல்லும் தகவல்களையும் சேகரித்து வைத்துள்ளார். சிறையிலிருக்கும் தாதா லாரன்ஸ் சல்மான் கானை கண்காணிக்க சொன்னதாக தெரிகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராகுல், துப்பாக்கி சுடுவதில் கைதேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். ராகுலை கைது செய்ததன் மூலம் சல்மான் கானை கொல்ல முயன்ற சதி முறியடிக்கப்பட்டுள்ளது.