“பிஸ்கோத்” படத்தில் வரும் சண்டைக்காட்சிக்காக நடிகர் சந்தானம் உண்மையிலேயே கத்திச்சண்டை பயிற்சி கற்றுக் கொண்டுள்ளார்.
பல தோற்றங்கள்
சந்தானம் நடிப்பில் புதிதாக ‘பிஸ்கோத்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. காமெடி படமாக தயாராகியுள்ள இப்படத்தில், அலிஷா பெரி, சுவாதி முப்பாலா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ‘பிஸ்கோத்’ படத்தில் நடிகர் சந்தானம் பல தோற்றங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது பிளாஷ்பேக் காட்சிகளில் பாகுபலியாக நடித்தது தான். அப்படத்தில் வரும் முக்கியமான எமோஷனல் காட்சிகள் அனைத்தையும் டிரெய்லரில் காமெடி வெளிப்படுத்தியது அனைவரையும் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ‘300’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் வரும் ஸ்பார்டன் கதாபாத்திரத்திலும் சந்தானம் நடித்து இருப்பார்.
பெரிய ரிஸ்க்
இதுபற்றி ‘பிஸ்கோத்’ படத்தின் இயக்குநர் கண்ணன் கூறுகையில்; பாகுபலி போன்ற காட்சியை எடுப்பது பெரிய அளவில் சவாலாகவே இருந்தது. 15 நாட்கள் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். ஒரு குறிப்பிட்ட சண்டை காட்சிக்காக மட்டும் 4 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும் ‘300’ திரைப்படத்தை அதிகளவில் பார்த்த பிறகு அதுதொடர்பான ஷூட்டிங் நடத்தினோம். அதில் இடம்பெறும் கத்திச்சண்டை காட்சிக்காக, நடிகர் சந்தானம் உண்மையிலேயே கத்திச்சண்டை பயிற்சி எடுத்தார். பிளாஷ்பேக் காட்சியில் வரும் வரலாற்றுக் காலத்தில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் எல்லாம் அனைவரையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு எடுத்தோம். இவ்வாறு இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.