தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
முழு ஊரடங்கு
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தளர்வுகளுடனான ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
உச்சம் தொட்ட விற்பனை
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சனிக்கிழமையான நேற்று ஒரேநாளில் மட்டும் ரூ. 189 கோடிக்கும் அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது. நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், தங்களுக்கு தேவையான மதுபானங்களை முன்கூட்டியே வாங்கி சென்றனர். கடந்த 5 வாரங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரேநாளில் மட்டும் 189 கோடியே 38 லட்சம் ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 44.55 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது. திருச்சியில் ரூ. 41.67 கோடிக்கும், சேலத்தில் ரூ. 41.20 கோடிக்கும், கோவையில் ரூ.39.45 கோடிக்கும் மதுபான விற்பனை நடைபெற்றுள்ளது.
கடந்த வாரத்தை விட அதிகம்
கடந்த வாரம் சனிக்கிழமையை விட இந்த வாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.