மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருப்பதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொட்டித் தீர்க்கும் கனமழை
மும்பையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. மும்பை நகரில் 140.5 மி.மீ. மழையும், மேற்கு மற்றும் கிழக்கு புறநகர் பகுதிகளில் 84.77 மி.மீ. மழையும் பெய்துள்ளது. அதாவது கடந்த 10 மணி நேரத்தில் மும்பை, தானே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 254 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கனமழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஒடுகிறது. கிங் சர்கிள், ஹிண்ட்மடா, தாதர், சிவாஜி சவுக், ஷெல் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
பேருந்து, ரயில் சேவை ரத்து
மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கவும், அத்தியாவசிய சேவைகளுக்குக்கான கடைகளை மட்டும் திறந்திருக்கவும் மாநகராட்சி அறிறுத்தியுள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியிருப்பதால் புறநகர் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மழைநீர் காரணமாக மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
‘ரெட் அலர்ட்’
இந்நிலையில் இன்றும், நாளையும் மிக அதிக கனமழை பெய்யும் எனவும் கடலில் 4.51 மீட்டர் அளவுக்கு உயர் அலைகள் எழும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தங்குமிடம் தேவைப்பட்டால், அதற்காக பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் மும்பை, தானே பகுதிகளில் அதிக கனமழையும், ரத்னகிரி மாவட்டத்தில் இன்று கனழையும், பல்தர் மாவட்டத்தில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.