சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு ஆந்திரா மற்றும் தெற்கு கர்நாடகா பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் எனவும் ஆய்வு மையம் கூறியுள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 15 செ.மீ. மழையும், அவலாஞ்சியில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கூடலூர் பஜார் பகுதியில் 9 செ.மீ. மழையும், பள்ளிப்பட்டு, பந்தலூரில் 8 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. சின்னக்கல்லார், மேல்பவானியில் தலா 7 செ.மீ., சோலையாரில் 6 செ.மீ., சின்கோனாவில் 5 செ.மீ., தாமரைப்பாக்கம், வால்பாறை, நடுவட்டம் பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here