நாடு முழுவதும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவவும், ஆகஸ்ட் 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு
சீனாவின் வூகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தே காணப்படுகிறது. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூலை 31ம் தேதி வரை 6ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கிறது.
ஊரடங்கில் தளர்வு
இதனிடையே, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஊரடங்கின் 3 ஆம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யோகா மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் ஆகஸ்ட் 5 முதல் செயல்படலாம் என்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் இயங்காது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.