கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறந்த நடிகை
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பூர்ணா, மலையாள சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்தார். இவர் தமிழில் கடைசியாக ராம் இயக்கிய ‘சவரக்கத்தி’ படத்தில் நடித்தார். இந்தப் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் ஒரு சில படங்களில் வில்லியாகவும் நடித்துள்ளார். பூர்ணாவை திருமணம் செய்துகொள்ளக் கோரி அவரது பெற்றோர்கள் பலமுறை வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் நடிப்பு ஒரு தடையாக இருக்கும் விஷயத்தால் தனது திருமணம் தாமதமாவதாக பூர்ணா கூறியிருந்தார். 
டிக் டாக் மாப்பிள்ளை
சில தினங்களுக்கு முன்பு அன்வர் அலி என்ற பெயர் கொண்ட ஒருவர், பூர்ணாவுக்கு டிக் டாக் மூலம் அறிமுகமாகியுள்ளார். தான் கோழிக்கோட்டைச் சேர்ந்த மிகப்பெரிய நகைக்கடையின் முதலாளி என்றும் தற்போது துபாயில் வசித்து வருவதாகவும் அவர் பூர்ணாவிடம் கூறியுள்ளார். அதன்பிறகு சிலமுறை அவர்கள் செல்போனில் உரையாடியதாகத் தெரிகிறது. சில நாட்களுக்குப் பிறகு அன்வரின் குடும்ப உறுப்பினர்கள் என்று கூறிக்கொண்டு சிலர் பூர்ணாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். அவர்கள் பூர்ணாவின் பெற்றோரிடமும் அன்வரின் புகைப்படம் என்று டிக் டாக் பிரபலம் ஒருவரின் புகைப்படத்தைக் காட்டி அவருக்குப் பூர்ணாவைத் திருமணம் செய்துவைக்குமாறு கேட்டுள்ளனர். இவர்களின் நடவடிக்கையில் பூர்ணாவின் குடும்பத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் பூர்ணாவை அந்தக் கும்பல் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை பூர்ணா, கொச்சிமரடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுவரை 10 பேரை கைது செய்துள்ளனர்.
வாலிபர்கள் கைது
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாடல் அழகிகள், இளம்பெண்களிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி அந்தக் கும்பல் பணம் மற்றும் நகைகளைப் பறித்துள்ளது. மேலும் படப்பிடிப்புக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி பாலக்காட்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி கும்பல் இதுபோன்று பலரை ஏமாற்றியது அம்பலமாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கோவையை சேர்ந்த நஜீப் ராஜா, ஜாபர் சாதிக் ஆகிய 2 இளைஞர்களை கேரள போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் 2 பேரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.















































