மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பில் உருவான ‘தில் பெச்சாரா’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது.
‘தில் பெச்சாரா’
பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் முகேஷ் சப்ரா இயக்கிய படம் ‘தில் பெச்சாரா’. மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், சஞ்சனா சங்கி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், OTTயில் நேற்று வெளியானது. ‘தி பால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக் தான் ‘தில் பெச்சாரா’ திரைப்படம். இப்படத்தின் கதையை சுஷாந்த் சிங் முன்னரே அறிந்து கொண்டாரா என்னவோ என்ற கேள்வியும், சந்தேகமும் படத்தை பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் எழுகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இருவர் காதலிப்பதும், அந்த நாயகன் கடைசியாக மறைவதுமே படத்தின் கதை.
அற்புதமான நடிப்பு
‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங் ‘மேனி’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை தனது நடிப்பை முழுவதுமாக வெளிப்படுத்தி, ஒரு இடத்தில் கூட நம்மை சலிப்டைய செய்யவில்லை சுஷாந்த். புற்றுநோயால் தனது கால்கள் பறிபோனதை, நோயாளிகளிடம் காட்டும் அந்தக் காட்சி பலரையும் கண்ணீர் விட வைத்துவிட்டது. மேலும் தனது இறுதி அஞ்சலியை தானே காண வேண்டும் என காதலி மற்றும் நண்பனிடம் சுஷாந்த் கூறும் காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள சஞ்சனா சங்கி, ‘கிஸ்ஸி’ என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். இது அவருக்கு அறிமுகத் திரைப்படம் என்று சொல்லவே முடியாத அளவிற்கு, அவரது நடிப்பு தத்ரூபமாக இருந்தது. பாலிவுட்டின் மாஸ் ஹீரோ சைஃப் அலிகான், இப்படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவர், ஹீரோயின் கிஸ்ஸியிடம் பேசும் சில வசனங்கள், சுஷாந்த் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது.
ரஜினி ரசிகர்
‘தில் பெச்சாரா’ படத்தில் சுஷாந்த் சிங் ரஜினி ரசிகராக வருகிறார். ரஜினியின் கபாலி படத்தை பார்ப்பது, ரஜினியின் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் எடுப்பது என படம் முழுக்க ரஜினி நிரம்பி இருக்கிறார். தமிழ் வசனமான சரி என்ற சொல் அதிக இடங்களில் இடம் பெற்றிருந்தது தமிழ் ரசிகர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மிகவும் முக்கிய பங்கு வகித்திருக்கிறார். அவரது இசையில் உருவாகியுள்ள அனைத்துப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகின. எதுவும் நிரந்தரமற்ற இந்த வாழ்வில், நாம் உயிருடன் இருக்கும் வரையில் சந்தோஷமாக இருக்க வேண்டும். நமக்கு நெருங்கியவர்கள் யாராவது மறைந்துவிட்டால், அவரது நினைவில் இருக்காமல், அவர்களின் நினைவுகளை நமது வாழ்க்கையில் இணைத்து வாழலாம் என்ற கருத்தை ஆழமாக உணர்த்தி இருக்கும் படம் ‘தில் பெச்சாரா’.