தமிழ் மொழியின் பழமையான காப்பியமான சிலப்பதிகாரத்தை சூர்யா மற்றும் நயன்தாராவை வைத்து திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் நாயகன்
தமிழ் இசையை உலகம் முழுவதும் தெரிய வைத்தவர் ஏ.ஆர். ரஹ்மான். ஹாலிவுட் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்ற தமிழன். தனது பாடல்களால் இந்திய திரைப்பட ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஏ.ஆர். ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் மூலம் ‘ரோஜா’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அன்று துவங்கி இன்று வரை ஒரு மிகப்பெரிய இசை அமைப்பாளராக நிலைத்து நிற்கிறார். திரைப்படங்களுக்கு பலர் இசை அமைத்தாலும், ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் புதியதை புகுத்தினார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று, ஹாலிவுட் சினிமாவையே இந்திய சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க செய்தார்.
ஏ.ஆர். ரஹ்மானின் ஆசை
தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குநராக வலம் வரும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் ஏ.ஆர். ரஹ்மானை பேட்டி எடுத்தார். அப்போது இருவரும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துகொண்டனர். ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், தமிழ் திரைப்பட உலகில் பல காவியங்களை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் தமிழ் மொழியின் பழமையான காப்பியமான சிலப்பதிகாரத்தை சூர்யா மற்றும் நயன்தாராவை வைத்து திரைப்படமாக எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கும் இந்தக் கூட்டணி இணைந்தால், அப்படம் நாட்டுப்புற கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் அல்லது நிச்சயமாக ஒரு ரொமாண்டிக் படமாக இருக்கும் என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.