ரஜினி நடித்த ‘முத்து’ திரைப்படத்தின் வசூல் சாதனையை இன்றுவரை எந்த பிரம்மாண்ட படங்களாலும் முறியடிக்க முடியவில்லை.
சாதிக்கும் “முத்து”
தமிழில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவரது படங்கள் எப்போதும் பல மொழிகளில் ரீமேக்கும், வெளிநாடுகளில் ரிலீஸூம் செய்யப்பட்டு வருகிறது. பெரிய அளவில் பிரம்மாண்டமாக உருவாகும் ஒரு மொழியின் படத்தை, வேறு மொழியில் எடுக்க முடியாத காரணத்தால் அதனை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். அந்த வகையில் பாகுபலி, பத்மாவதி, எந்திரன் போன்ற பல பிரம்மாண்ட படைப்புகள் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகளவில் மெகா ஹிட்டானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘முத்து’ திரைப்படம் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டு, வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறது.
எதார்த்தமான படம்
1995 ஆம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மீனா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்து ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் என அனைத்தும் கொண்ட திரைப்படம் ‘முத்து’. தமிழில் மெகா ஹிட்டான இப்படத்திற்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார். தமிழகத்தில் 175 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி வசூல் சாதனை படைத்தது. இதனையடுத்து 1998 ஆம் ஆண்டு ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கு 450 மில்லியன்களுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. ‘முத்து’ திரைப்படம் மலையாளத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ என்ற படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல் சாதனை
ரஜினியின் கபாலி, 2.0 போன்ற படங்களும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டு, வசூல் சாதனை படைத்தது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் அனைத்தும், சூப்பர் ஸ்டார் படமான முத்து படத்திற்கு இணையாக நெருங்கக்கூட முடியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. பிரபாஸ், ராணா டகுபதி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர், சத்யராஜ் போன்ற நடிகர் பட்டாளமே நடித்து தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி பல மொழிகளிலும் வெளியாகி பெரிய பிரம்மாண்டத்தை ஏற்படுத்திய படம் ‘பாகுபலி’. ராஜமவுலி இயக்கிய இப்படம், உலகின் பல நாடுகளில் வெளியாகி வசூல் சாதனையை படைத்து. இருந்தாலும், ஜப்பானில் இதுவரை ‘முத்து’ படம் செய்த சாதனை வசூலை, எந்த படங்களாலும் முறியடிக்க முடியவில்லை. முத்து திரைப்படம் 450 மில்லியன் வரை வசூல் செய்த நிலையில், பாகுபலி 275 மில்லியன் மட்டுமே வசூலித்துள்ளது. இப்படங்கள் மட்டுமல்லாமல் த்ரீ இடியட்ஸ், இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற இந்திய திரைப்படங்கள் ஜப்பான் மக்களால் அதிகளவு ரசிக்கப்பட்டது.