நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வுமான ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
சினிமா என்ட்ரி
ஸ்ரீலதா என்ற பெயருடன் திரை உலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை ரோஜா. 1990களில் கொடிகட்டிப் பறந்த பல நடிகைகளுள் ரோஜாவும் ஒருவர். ‘செம்பருத்தி’ என்ற முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையை காட்டி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். பிறகு சூரியன், உழைப்பாளி போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 70 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தெலுங்கில் 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 2002 ஆம் ஆண்டு நதி எங்கே போகிறது என்ற டிவி தொடரில் நடிக்கத் தொடங்கிய ரோஜா, இன்று வரை டிவி தொடர்களிலும், சிறப்பு விருந்தினர் ஆகவும், தொகுப்பாளினி ஆகவும் கலக்கி வருகிறார்.
அரசியலிலும் டாப் தான்
சினிமா ஒரு பக்கமிருக்க அரசியலையும் அவர் விட்டுவைக்கவில்லை. பொலிட்டிகல் சயின்ஸ் படித்த நடிகை ரோஜா அரசியலிலும் தனது திறமையை காட்டி வருகிறார். 1999ஆம் ஆண்டு அரசியலில் கால் பதித்த அவர், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சூப்பரான அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். 2014ம் ஆண்டு முதல் ஆந்திராவின் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வரும் ரோஜா, அதன்பிறகு 2019ல் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.
சர்ச்சையில் சிக்கிய ரோஜா
இரு தினங்களுக்கு முன்பு ஆந்திராவில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய 108 ஆம்புலன்ஸ் சேவையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இதையடுத்து நகரி தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களைத் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் பங்கேற்ற நடிகை ரோஜா, திடீரென்று ஆம்புலன்சில் ஏறி அதனை ஓட்டத் தொடங்கிவிட்டார். கிட்டத்தட்ட 20 கிலோ மீட்டர் தூரம் ஆம்புலன்ஸை ஓட்டியிருக்கிறார். ரோஜாவின் இந்த செயலை பலரும் கண்டித்தும், விமர்சித்தும் வருகின்றனர். சாகசம் செய்வதற்கான வாகனம் ஆம்புலன்ஸ் அல்ல என்றும் அவரது இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் பிரச்சனை செய்து வருகின்றனர். அவசர காலத்திற்காக ஓட்டப்படும் ஆம்புலன்ஸை இயக்குவதற்கு தனி திறமையும், தைரியமும், லைசென்ஸூம் வேண்டும். அது அவரிடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில் நடிகை ரோஜா ஒரு கிராமத்திற்கு சென்று பம்புசெட்டை திறந்து வைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த மக்கள், அவருக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். இந்த வீடியோ வெளியானதையடுத்து, கொரோனா சமயத்தில் இப்படி கூட்டம் கூட்டி விட்டீர்கள் என்று பலர் கண்டனம் தெரிவித்தனர். அதனைதொடர்ந்து தற்போது ஆம்புலன்ஸை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் ரோஜா. இதை பார்த்த நெட்டிசென்ஸ் “ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி” எனக்கூறி அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.