தனது வாழ்க்கையில் அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோரின் வரிசையில் இயக்குநர் கே. பாலசந்தரும் இருக்கிறார் என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறியுள்ளார்.
தலைசிறந்த இயக்குநர்
1930ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி பிறந்தவர் கே. பாலசந்தர். மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி படம் இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர்நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன பாலசந்தர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை அறிமுகம் செய்தவர். கே. பாலசந்தர் மறைந்தாலும் அவரின் படைப்புகள் என்றும் மக்கள் மனதிலிருந்து அழியாது.
அப்பா, அம்மா வரிசையில் கே.பி
கே. பாலசந்தரின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; இன்று என் குருவான கே.பி. அவர்களின் 90வது பிறந்தநாள். கே. பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும், நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன். ஆனால் இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே. பாலச்சந்தர் சார் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்டுகளை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தினார். என் வாழ்க்கையில் அப்பா, அம்மா, அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி. இருக்கிறார்.
மிகப்பெரிய மகான்
எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்கள். அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர். நான் பல இயக்குநர்களிடம் பணியாற்றி உள்ளேன். கே.பி. சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அதுபோன்ற ஒரு கம்பீரம் கே.பி அவர்களிடம் இருந்தது. சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் அன்பாகவும் சகஜமாகவும் பழகுவார். அது யாருகிட்டயும் இருந்ததில்லை. கே.பி வாழ்ந்த காலத்தில் தந்தையாக, கணவனாக, மகனாக, இயக்குனராக அனைத்திலும் பர்பெக்ட்டாக விளங்கினார். இன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம். மிகப்பெரிய மகான் எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு அவர்களை நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.