கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் -2’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
ஊரடங்கால் பாதிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி ஒருசில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது கட்டுபாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், சென்னையில் கொரோனா பரவல் அதிகமான காரணத்தால் ஜூன் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தொடங்கப்பட்ட பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
பணிகள் தொடக்கம்
தற்போது ஜூலை 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சினிமா பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ மற்றும் நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன்’ ஆகிய படங்களின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளுடன், சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளும் இன்று முதல் தொடங்கப்படுகிறது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பு
கடந்த 1996ம் ஆண்டு வெளியானது ‘இந்தியன்’ திரைப்படம். சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், லஞ்சத்திற்கு எதிராக தனிநபர் போராட்டத்தை நடத்துவதுதான் இந்தியன் படத்தின் கதை. மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில், காவேரி, சுகன்யா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 70 வயது பெரியவர், அவருடைய மகன் என இரண்டு வேடங்களில் கமல்ஹாசன் கலக்கி இருந்தார். பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் இயக்கத்தில் வெளியான இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருந்தார். அப்போதே இந்த படத்தில் லஞ்சம், அரசியல் என்று பேசப்பட்டது. தற்போது கமல்ஹாசன் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதும், இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு பின் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதும், இது கண்டிப்பாக கமல்ஹாசனின் அரசியல் வாழ்க்கைக்கு அடுத்த கட்டமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியன் 2 படத்திற்கு மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.