‘சூரரைப் போற்று’ படத்தின் ஆடிஷனுக்காக சென்றபோது அதில் சூர்யா ஹீரோ என்பது தனக்கு தெரியாது என்றும் பின்னர் சூர்யாவுடன் சேர்ந்து நடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி எனவும் இளம் நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

‘சூரரைப் போற்று’

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூரரைப் போற்று’. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராப், கருணாஸ், காளிவெங்கட் உட்பட பலர் நடித்துள்ளனர். தெலுங்கு நடிகர் மோகன்பாபு பல வருடங்களுக்கு பிறகு தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

தள்ளிப்போகும் ரிலீஸ்

‘சூரரைப் போற்று’ படத்தை ஏப்ரல் மாத இறுதி அல்லது மே 1-ந் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்தது குறித்து அப்படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ‘சூரரைப் போற்று’ படத்துக்கான ஆடிஷனுக்கு நான் சென்ற போது இதில் சூர்யா நடிக்கிறார் என்று எனக்குத் தெரியாது. சுதா கொங்கரா இயக்கும் படம் என்பது மட்டும்தான் தெரியும். பிறகு ஆடிஷனின் தேர்வாகி, சூர்யா நடிக்கும் படம் என்று தெரிந்ததும் நான் அடைந்த ஆச்சரியத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அளவில்லை. ஏனென்றால் ‘காக்க காக்க’ படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை எனத் தெரிவித்துள்ளார்.

அபர்ணா பாலமுரளி

தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள அபர்ணா பாலமுரளி, ஏற்கனவே 8 தோட்டாக்கள், ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்துள்ள சர்வம் தாள மயம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here