கிரகங்கள் உச்சமானால் என்னென்ன பலங்கள் கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்…
சூரியன்
நவக்கிரகங்களில் தலைவனாக விளங்குவது சூரியன். ஒருவருக்கு சூரியன் உச்சமானால், அவர் கல்வி அறிவில் சிறந்து விளங்குவார். ஆன்மீக நாட்டம் கொண்டு பக்திமானாகவும் இருப்பார். பலம் மிக்கவராகவும், உதவும் மனம் கொண்ட பரோபகாரியாகவும் இருப்பார். தர்ம சிந்தனையில் ஓங்கி நிற்பார்.
சந்திரன்
மனோகாரகனான சந்திரன் உச்சம் அடைந்தால், அவர் நல்ல கல்வி அறிவு, எச்செயலையும் முடிக்கும் விடாமுயற்சி கொண்ட செல்வந்தராகவும் இருப்பார்.
செவ்வாய்
படைத்தளபதியாக வீரத்தோடு இருக்கும் செவ்வாய் உச்சமானால் அவர், பலரும் அறியக்கூடிய பிரபலமானவர், புகழ்மிக்கவர். ஒரு செயலை முடிப்பதில் விடாமுயற்சியோடு திகழ்வார். தன்னம்பிக்கை, ஆக்கம், ஊக்கம் கொண்டராகவும், ராஜயோக வசதிகள் பெற்றிருப்பராகவும் விளங்குவார்.
புதன்
கல்விக்கு அதிபதியாக விளங்கும் புதன் உச்சமானால், அவர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார். பலரால் போற்றப்படுவார், கெளரவிக்கப்படுவார். சோர்ந்து போகாத உற்சாக மனதை உடையவர். அதிர்ஷ்டம் உள்ளவர்.
குரு
குரு உச்சம் கோடி நன்மை என்பார்கள். லாபாதிபதியான குரு ஒருவருக்கு உச்சம் பெற்றால், கூட்டுத்தொழிலில் தலைமை தாங்குவார். முன்கோபம் இருந்தாலும் பலரால் மதிக்கப்படுவார். பலவானாகவும் பிறரை ஆதரிப்பவராகவும் இருப்பார்.
சுக்கிரன்
சுக்கிரன் சுகாதிபதி, ஆசைக்காரகன். சுக்கிரன் உச்சமானால் ஆயுள் நீடிக்கும். திறமைகள் பளிச்சிடும். தர்ம சிந்தனைகளில் மேலோங்குவார்.
சனி
நீதிதேவன் சனி உச்சமானால் அந்த நபர் சாமர்த்தியசாலியாகவும், செல்வந்தராகவும் திகழ்வார். மனைவி மீது காதல் கொண்டு அன்பைப்பொழிவார். தீர்க்காயுள் பெற்று தர்ம சிந்தனை கொண்டவராகத் திகழ்வார்.
நிழல் தரும் கிரகங்கள்
ஒன்பது நவக்கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு, கேது உச்சம் அடைந்தால் நற்சிந்தனைகளுடன், நிறைந்த செல்வங்களுடன் வாழ்வர். இப்படி நவக்கிரகங்களின் உச்சம் ஒவ்வொரு நபருக்கும் பல நல்ல பலன்களைத் தரும்.