நாட்டில் கவனிக்க வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது உங்கள் பிரச்சனையில் தலையிட்டது தப்புதான் எனக்கூறி நடிகை வனிதா விவகாரத்தில் போட்ட டுவிட்டுகளை டெலிட் செய்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
திருமண சர்ச்சை
நடிகை வனிதா விஜயகுமார் தன் காதலரான பீட்டர் பாலை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். வீட்டிலேயே எளிமையாக நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய சொந்தங்களும், நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். திருமணம் முடிந்த கையோடு சர்ச்சையும் கிளம்பியது. பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன், தன் கணவர் தனக்கு வேண்டும் என்று கூறி சர்ச்சை ஒன்றை கிளப்பினார். விவாகரத்து கொடுக்காமலேயே மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக அவர் மீது போலீசில் புகாரும் அளித்துள்ளார். அதனால் மூன்றாவது திருமணத்திலும் பிரச்சனையை சந்தித்து வருகிறார் வனிதா விஜயகுமார். யார் என்ன சொன்னாலும் கவலையில்லை என அவரது வேலையில் கவனமாக இருந்து வருகிறார் வனிதா. தினம் தினம் கணவருடன் கொடுக்கும் முத்தத்தையும் புகைப்படமாக எடுத்து தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு, பல வகையான கேலி பேச்சிற்கு ஆளாகியுள்ள வனிதா, இந்த திருமணத்தை பற்றி விமர்சிப்பவர்களை சகட்டுமேனிக்கு கடிந்து வருகிறார்.
விளாசித்தள்ளிய வனிதா
விவாகரத்து ஆகாமலேயே மூன்றாவது திருமணம் செய்துகொண்ட வனிதாவை, படித்தவர் யாராவது இப்படி செய்வார்களா, இத்தனை முறை வாழ்க்கையில் தோல்வி அடைந்த பின்னும் ஏன் இவர் இப்படி தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று டுவிட்டரில் பல பதிவுகளை போட்டார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். அதைப்பார்த்த வனிதா, உங்கள் அட்வைஸ் எல்லாம் எங்களுக்கு தேவை இல்லை. நான் படித்தவள் தான், சட்டம் தெரிந்தவள் தான், திருமணம் என்றால் என்ன என்று மற்றவர் யாரும் எனக்கு விளக்கிக்கூறத் தேவையில்லை. நாங்கள் கஷ்டப்படும் போது யாரும் வந்து எங்களுக்கு உதவி செய்யவில்லை. அதனால் எங்கள் வேலையை நாங்கள் பார்க்கிறோம், உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என்று பலவிதமாக விளாசித் தள்ளினார். உங்கள் ஷோவில் நீங்கள் செய்யும் வேலை எல்லாம் என் வாழ்க்கையில் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் எப்போதும் நீங்கள் செய்யும் வேலையை செய்யுங்கள் என்றும் கூறி டுவிட்டரில் பதில் பதிவு செய்தார்.
பதிவுகள் அழிப்பு
புதுக்கோட்டை அருகே 7 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதா விஜயகுமார் பற்றி போட்ட அனைத்து டுவிட்டுகளையும் நீக்கி விட்டார். நாட்டில் கவனிக்க வேண்டிய பிரச்சனை எவ்வளவோ இருக்கிறது, அதை விட்டுவிட்டு உங்கள் பிரச்சனையில் நாங்கள் வந்தது தப்புதான். அதனால் அனைத்து டுவிட்டையும் டெலிட் செய்துவிட்டேன். வழக்கம் போல என்னோட வேலையான குழந்தைகளுக்காக போராடுவது போன்ற நல்ல வேலைகளை செய்ய போகிறேன் என லட்சுமி ராமகிருஷ்ணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். வனிதாவிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் மன்னிப்பு கேட்ட மாதிரி இருந்தாலும், அது ஒரு வகையில் அவரை சாடியுள்ள மாதிரியும் இருப்பதாக பல நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.