தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரைக்கவில்லை என மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

முதல்வருடன் சந்திப்பு

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளையுடன் நிறைவடையும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் என்னனென்ன செய்யவேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? அல்லது கூடுதல் தளர்வுகள் அறிவிக்கலாமா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. நோய் தாக்கம் அதிகம் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முழு முடக்கத்தை நீட்டிக்க வேண்டுமா என்பது குறித்தும் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சரிடம் மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவக் குழு, ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வு அல்ல. எனவே, ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் பரிந்துரை செய்யவில்லை. தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று கூறி உள்ளோம். தற்போது சென்னையில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகின்றன. தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. சென்னையைப் போன்று பாதிப்பு அதிகரித்து வரும் திருச்சி, மதுரை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கும்படி கூறி உள்ளோம். மேலும் சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளோம் என மருத்துவக்குழு தெரிவித்துள்ளது

பயப்பட வேண்டாம்

பாதிப்பு இரட்டிப்பாகும் வேகம் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது என்று தெரிவித்துள்ள மருத்துவக்குழு அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு நீட்டிப்பு வேண்டாம் என்றும் காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் எனவும் கூறியுள்ளது. சுவை, மணம் தெரியாதவர்கள் காய்ச்சல் மையம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள மருத்துவக்குழு தமிழகத்தில் 80 சதவீதம் பேருக்கு லேசான அறிகுறிகள்தான் இருப்பதால் பயப்பட வேண்டாம் என்றும் விளக்கமளித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here