கொரோனாவால் மனித இனத்திற்கே பெரிய சிக்கல் வந்திருக்கும் இந்த சூழலில் ஒருவருக்கொருவர் உதவி செய்வோம் என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் கொரோனா
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நாள் ஒன்றுக்கு சுமார் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஜூன் 19 தேதி முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் மரணம்
நாடு, இனம், ஏழை, பணக்காரன் என எந்த வேறுபாடும் இன்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா பாதித்து வரும் சோகமான இந்தச் சூழ்நிலையில், கடந்த ஞாயிறன்று பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மன நல ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் பிரபலங்கள் பல்வேறு கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அனுஷ்கா கருத்து
அந்த வகையில் நடிகை அனுஷ்கா ஷெட்டி தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “எல்லோரும் நிறைவானவர்கள் என்பது இல்லை. சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கின்றனர். இதுதான் சரி இதுதான் தவறு என்பதும் இல்லை. வாழ்க்கையை நடத்த நாம் பிறக்கும்போதே வரைபடத்தோடு பிறக்கவில்லை. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் சிறியவராக இருந்தாலும் அவரவர் வழிகளில் நடக்கின்றனர். சிலர் உதவி கேட்பார்கள். சிலர் உள்ளுக்குள் உடைந்து போவார்கள். சிலர் அழுது விடுவார்கள். சிலர் அமைதியாக இருப்பார்கள். சிலருக்கு உதவிகள் கிடைப்பது இல்லை. சிலர் அவரவர் வழியை அனுபவப்பூர்வமாக உணர்ந்து செயல்படுவார்கள்.
உதவி செய்யுங்கள்
ஒருவருக்கொருவர் உதவி செய்யவும் கனிவோடு இருக்கவும் கற்றுக்கொள்வோம். விட்டுக்கொடுக்கவும் மற்றவர்கள் மீது அன்பு காட்டவும் கற்றுக்கொள்வோம். மற்றவர்கள் பேசுவதை கேட்கவும், பிறருடன் உரையாடவும் வலுவாக இருக்கவும், பலகீனமாக இருக்கவும் கற்றுக்கொள்வோம். உள்ளே எப்படி உணர்கிறோமோ அதை வெளியே மற்றவர்களுக்கும் சொல்லலாம். நாம் மனிதர்கள், சிரிப்பு நேர்மையான வழியில் செல்லுதல் போன்றவை வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும். நம்மால் எல்லாவற்றையும் மாற்ற முடியாது, சரி செய்யவும் முடியாது என்று எண்ணுவதைவிட ஒரு சிறிய அடி எடுத்து வைத்தாலும் பெரிய மாற்றம் வரும் என்று மனவுறுதி கொள்ள வேண்டும்.” இவ்வாறு அனுஷ்கா கூறியுள்ளார்.