பிரபல தயாரிப்பாளர் தயாரித்த 3 திரைப்படங்கள் நேரடியாக OTT தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி முதல் மே 31 வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. தற்போது ஜீன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 5ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தியேட்டர்கள் திறப்பதற்கான எந்த அறிவிப்பும் அதில் இடம்பெறவில்லை. இதனால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
OTTயில் படங்கள்
தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் சில திரைப்படங்கள் நேரடியாக OTT எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை வேடத்தில் நடித்திருந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் கடந்த மே மாதம் 29ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைமில் வெளியானது. அதனைதொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பெண்குயின்’ திரைப்படம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடும் எதிர்ப்பு
OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடுவதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் OTT தளத்தில் வெளியிட்டதற்கு போர்க்கொடி உயர்த்திய தியேட்டர் உரிமையாளர்கள், சூர்யா தொடர்பான எந்த ஒரு படத்தையும் இனி தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்தனர்.
OTTயில் ரிலீஸ்
இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ். சதீஷ்குமார், தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”எங்கள் ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேசன் தயாரித்துள்ள படங்களான ‘அண்டாவக் காணோம்’, ‘வா டீல்’, ‘மம்மி சேவ் மீ’ ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. மேலும் நாங்கள் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் 3 படங்களின் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களின் அறிவிப்பையும் விரைவில் வெளியிடவிருக்கிறோம். எப்பொழுதும் போல் உங்கள் ஆதரவு தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கலக்கல்
தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில், தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வரிசையாக OTT தளத்தில் வெளியிடுவது தியேட்டர் உரிமையாளர்களை மேலும் கலக்கமடையச் செய்துள்ளது.