சென்னை அருகே நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரி சென்ற காரில் இருந்து ஏராளமான மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாஸ்மாக் மூடல்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூன் 1ம் தேதி முதல் சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட கட்டுப்பாட்டுப் பகுதிளை தவிர்த்து மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மதுவகைகள் கிடைக்காததால், அப்பகுதியில் உள்ளவர்கள் வெளிப்பகுதிகளில் சென்று மதுவினை வாங்கி வருகின்றனர். இதனை தடுக்க போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீஸ் சோதனை
இந்நிலையில், கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள முட்டுக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த நடிகை ரம்யா கிருஷ்ணனின் காரை மடக்கி, சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்தனர். அதற்கு காரில் இருந்த நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
மதுபாட்டில்கள் கண்டுபிடிப்பு
காவல்துறையினர் சோதனையிட்ட போது அந்த காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், இதுதொடர்பாக காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர். சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை நடிகை ரம்யா கிருஷ்ணனும், அவரது சகோதரி வினயா கிருஷ்ணனும் பிணையில் அழைத்துச் சென்றனர். முன்னணி நடிகையின் காரில் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.