சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர்

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாசன வசதிக்காக மேட்டூர் அணையையே நம்பி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம்தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தற்போது கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

நீர் திறப்பு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100.01 அடியாகவும், நீர் இருப்பு 64.85 டி.எம்.சி.யாகவும் உள்ளது. இது 50 நாட்கள் வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட போதுமானது என்பதால் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தண்ணீர் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் பேச்சு

பின்னர் பேசிய முதலமைச்சர், மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு 90 நாட்கள் நீர் திறந்து விடப்படும் என்றார். இதன்மூலம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 400 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் எனவும், மேட்டூர் அணையின் உபரி நீரைக்கொண்டு சேலத்தில் ஜனவரிக்குள் 100 ஏரிகளில் தண்ணீர் நிரப்பப்படும் எனவும் தெரிவித்தார். பாசன பரப்பை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதலமைச்சர், கடைமடை வரை நீர் சென்று சேர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.

தவறான செய்தி

முதலமைச்சர் பழனிசாமி மேலும் பேசுகையில்; 8 வழிச்சாலை திட்டம் மத்திய அரசின் திட்டம். போக்குவரத்து அதிகம் அடைந்துள்ளதால் சாலைகள் விரிவாக்கம் அவசியம். தேவைக்கேற்ப நிலத்தை கையகப்படுத்தி சாலைகள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா தொற்றின் வீரியத்தை மக்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதை மக்கள் தவிர்ப்பது வேதனையளிக்கிறது. பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றி வருகின்றனர். நோய்த்தொற்று யாருக்கு வரும் என்பது குறித்து சொல்ல முடியாது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here