கொரோனா வைரஸ் ஏதும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரே ‘மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், இயக்குநருமான கேயார் கேட்டுக் கொண்டுள்ளார்.
‘மாஸ்டர்’
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரிலீசை தள்ளிப்போடுங்கள்
இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான கேயார், தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ‘மாஸ்டர்’ வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “முதல் படமாக ‘மாஸ்டர்’ திரையிடப்பட்டால் நிறைய மக்களால் பார்க்க இயலாது. ‘மாஸ்டர்’ படத்துக்கு பெரிய ஓப்பனிங் வேண்டும். அது வைரஸ் ஏதும் இல்லாமல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். ஊரடங்கு முடிந்ததும் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்வதன் மூலம் தொழில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது” என்று கூறியிருக்கிறார்.
வரி ரத்து நடவடிக்கை
மேலும், மத்திய – மாநில அரசுகள் விதிக்கும் 26 சதவீத ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியை ரத்து செய்து சினிமா தொழிலுக்கு கைகொடுக்க வேண்டும். ஒருவேளை தமிழக அரசு தியேட்டர்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த கூடாது என்று நிபந்தனை விதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டால், தியேட்டர்கள் திறப்பதை தள்ளிப் போடுவதே சிறந்தது” என்றும் கேயார் கருத்து தெரிவித்துள்ளார்.
ரூ. 30 கோடிக்கு விற்பனை
‘மாஸ்டர்’ படத்தின் வெளிநாட்டு உரிமை சுமார் 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது அரபு நாடுகளில் மட்டுமே திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும் நிலையில் அவசர அவசரமாக படத்தை ரிலீஸ் செய்வது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும்.