திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தை
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணி கட்சிகள் இடையே தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதில் மதிமுகவுக்கு ஒரு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஆதரவு
இந்நிலையில், திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று நேரில் சந்தித்து பேசினர். 2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ளிட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வதெனவும், மாநிலங்களவைத் தேர்தல் ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
பதவிக்கான விஷயம் அல்ல
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை எனத் தெரிவித்தார். இது பதவிக்கான விஷயம் அல்ல, நாட்டுக்கான விஷயம் எனவும், எங்கே கைகுலுக்க வேன்டுமோ அங்கு கைகுலுக்கியுள்ளேன் எனவும் கூறினார்.