கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கு உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் திடீரென மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட தீ உணவகத்தில் மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர். வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். அப்போது அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பலத்த பாதுகாப்பு
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், சம்மந்தப்பட்ட உணவகத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளிலும், பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கைது
சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த நபர் எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்தந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது.
மிரட்டல்
இந்த நிலையில், கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.