தான் அமைதியாக இருப்பது எல்லோருக்கும் நிம்மதிய தரும் எனக்கூறி சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறியுள்ளார் பிரபல இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன்.
‘பிரேமம்’ புகழ்
தமிழில் நிவின் பாலி – நஸ்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படத்தை இயக்கியவர் அல்போன்ஸ் புத்ரன். முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த அல்போன்ஸ், அடுத்ததாக மலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் அவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இதன்மூலம் அனைவர் மத்தியிலும் பேசப்படும் ஒரு இயக்குனராக அல்போன்ஸ் புத்ரன் உயர்ந்தார்.
மோசமான விமர்சனம்
‘பிரேமம்’ படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பிருத்விராஜ் – நயன்தாரா நடிப்பில் ‘கோல்ட்’ படத்தை இயக்கினார். இப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. எந்தவித புரொமோஷனும் இல்லாமல் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ‘கோல்ட்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் அதிருப்தி அடையச் செய்துள்ளதாக கூறப்பட்டது. தொடர்ந்து இவர் தற்போது ‘கிஃப்ட்’ என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
பயமுறுத்துறாங்க
இந்நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நான் இனி எதையும் பதிவிடப்போவதில்லை. என் அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு இது பிடிக்கவில்லை. ஏனென்றால் எனது உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருப்பது அனைவருக்கும் நிம்மதியை தரும் என நினைக்கிறேன். அதனால் அப்படியே இருக்கட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்ரனின் இந்த முடிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.