சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மிகுந்த எதிர்பார்ப்பு
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது. ஜெயிலர் திரைப்படத்தில் கன்னட நடிகரான சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
அறிவிப்பு
‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ மற்றும் ‘இது டைகரின் கட்டளை’ பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.