கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.
மிகுந்த வரவேற்பு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த தனியார் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தவர் ஷர்மிளா. வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் பேருந்தை இயக்கி வந்த ஷர்மிளாவுக்கு, பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளா சமூக வலைதளங்களிலும் பிரபலமாகி வருகிறார்.
கனிமொழி பயணம்
இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு திமுக எம்.பி.கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணம் மேற்கொண்டார். அவர் காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை பேருந்தில் பயணம் செய்தார். பயணத்தின்போது ஷர்மிளாவுக்கு கனிமொழி எம்.பி. தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், அவருடன் சிறிது நேரம் பேருந்தில் பயணித்தபடியே பேசி சென்றார்.
பணி விலகல்
கனிமொழி பயணித்த தினத்தன்று ஏற்பட்ட சில சச்சரவுகள் காரணமாக ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஷர்மிளா தாமாகத் தான் பணியில் இருந்து விலகுவதாக கூறியதாக பேருந்தின் உரிமையாளர் விளக்கம் அளித்தார்.
கார் பரிசு
இந்த நிலையில், கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை நேரில் சந்தித்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், அவருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.