‘புஷ்பா 2’ படக்குழுவினர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மிகப்பெரிய வெற்றி

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான “புஷ்பா தி ரைஸ்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், அல்லு அர்ஜுன் கதாபாத்திரம் மட்டுமில்லாமல் பகத் ஃபாஸிலின் நடிப்பும் பிரம்மாண்டமாக பேசப்பட்டது. இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மைத்ரேயி மூவி நிறுவனம் தயாரித்திருந்த “புஷ்பா தி ரைஸ்” திரைப்படம் ரூ.350 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனையும் படைத்தது. இந்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

பயங்கர விபத்து

புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்பிற்கு சென்ற வழியில் விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இப்பட குழுவினர் தெலுங்கானா மாநிலம் நல்லகொண்டா மாவட்டம் நர்கெட்பள்ளி என்ற இடத்தில் பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது, அந்த பேருந்தின் மீது லாரி வேகமாக மோதி உள்ளது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் திரையுலகினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here