அமைதியான போராட்டத்தை முன்னெடுத்த தங்களை பாதுகாப்பு படையினர் பின்புறமாக தள்ளி வலுக்கட்டாயமாக இழுத்து சென்றதாக பிரபல மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் வேதனை தெரிவித்துள்ளார்.
குண்டுக்கட்டாக கைது
பாலியல் குற்றச்சாட்டு ஆளான இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிட் பூஷன் சிங்கை கைது செய்ய கோரி டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து புதிய நாடாளுமன்றம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற வீராங்கனைகளை போலீசார் தடுத்து நிறுத்தி குண்டுக்கட்டாக கைது செய்தனர். வீராங்கனைகள் இழுத்து செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதயம் இருக்கிறதா?
குண்டுகட்டாக கைது செய்ததுடன் வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸ் நடவடிக்கைக்கு ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட போது போலீஸ் வாகனத்தில் வினேஷ் போகட், சங்கீதா போகட் ஆகியோர் சிரித்தவாறு புகைப்படம் வெளியிட்டது கண்டனத்திற்குரியது என்றும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு இதயம் இருக்கிறதா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். வீராங்கனைகள் போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சியாகவே பொய்யான புகைப்படம் வெளியிட்டுள்ளதாகவும் சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டியுள்ளார்.